ஆறாவது மாதம் கடந்த பிறகும், அம்மிணிக் குட்டியின் கர்ப்பத்தை அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஏழாவது வகுப்பில் மூன்றுமுறை தோற்று, படிப்பை நிறுத்திக்கொண்ட அந்த பதினெட்டு வயதுக்காரி, கள்ளங்கபடமற்ற இளம் பெண்களில் கள்ளங்கபடம் இல்லாதவள் என்று பொய் பேசக்கூடிய கமலாக்ஷி கூட நம்பினாள்.
போதாதற்கு தாயே இல்லாதவள். கண் பார்வை தெரியாத பாட்டியுடன் ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருப்பவள்.
வீட்டின் வாசலில் காவல் மிருகத்தைப் போல இரவு வேளைகளில் உறங்குவதற்கு வேலுவார் என்று அறியப்படும் ஒரு மாமாவும் இருந்தான். ஈ பறந்தால் கண் விழிக்கக்கூடிய இயல்பு அந்த கிழவனுக்கு. இரவுப் பொழுதில் அவ்வப்போது பாயிலிருந்து எழுந்து "யாரு?... யார் அது?'' என்று உரத்த குரலில் அழைப்பதைப் பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் கேட்பதுண்டு.
அதற்குப் பிறகுமா அம்மிணிக்குட்டி தவறு செய்தாள்? கேள்விப்பட்டவர்கள் நம்பவில்லை.
ஆரம்பத்தில் அவளுக்கு வாந்தியும் சோர்வும் வந்தன. வாந்தி எடுப்பதற்கான காரணத்தைக் கேட்பவர்களிடம் அவள் கூறினாள்:
"நான் பச்சை கொய்யா காயைக் கொஞ்சம் வெட்டி சாப்பிட்டேன்.
இன்னைக்கு பச்சைப் புளியங்காயைச் சாப்பிட்டேன்.''
கிணற்றின் கரையில் நிற்கும் மரத்தில் காயைப் பறித்துத்தின்றாள். குளத்தில் குளிப்பதற்காக வரக்கூடிய பெண், கிணற்றின் கரையில் நின்றுகொண்டு சாயங்காலம் கடந்த பிறகு, நீரை மொண்டு ஊற்ற ஆரம்பித்ததைப் பார்த்து பாட்டி கேட்டாள்:
"என்ன ஆச்சு உனக்கு? கிணற்று நீர் குளிர்ச்சியாக இருக்கும். போதாததற்கு.... இரவு வேறு. உனக்கு நீர் இறங்கும், பெண்ணே...''
அம்மிணிக்குட்டியின் சரீரத்தைத் தடவி சோதித்துப் பார்த்த பாட்டிக்கு சந்தேகங்கள் மனதில் தோன்றின.
அவளுடைய ஆல இலையைப் போன்ற வயிறு பெரிதாக இருக்கிறதே! இடை பெருத்திருக்கிறது. தோலுக்கு மினுமினுப்பு கூடியிருக்கிறது.
"உன் மார்புக் காம்பு கறுத்திருக்கிறதா, கண்ணு?''- கிழவி கேட்டாள்.
"ஆமாம்... பாட்டி''.
"என் பாவிட்டம் குளங்கரை பகவதீ.... நான் இப்போ என்ன கேட்கிறேன்? யார் உன்னைக் கெடுத்தது? நீ உயிருடன் இருக்க வேண்டாம். நீ குடும்பத்தின் மானத்தைக் கெடுத்துட்டியே...
நாசமா போறவளே! மாமா கேள்விப்பட்டால், என்ன செய்வான் என்றே எனக்குத் தெரியல. வெட்டுக் கத்தியை வைத்து துண்டு துண்டாக்கி தூரத்துல விட்டெறிவான்.''- பாட்டி கோபத்துடன் கூறினாள்.
அவளுடைய வாயின் ஓரங்களிலிருந்து எச்சில் நுரைத்து வழிந்தது.
"என்னை யாரும் தொட்டதே இல்லை. குருவாயூரப்பன் மீது சத்தியம் பண்ணிச் சொல்றேன். என்னை யாரும் இதுவரை தொட்டதில்லை''- அம்மிணிக்குட்டி கூறினாள்.
அன்று சாயங்காலம் வேலியின் அருகில் நின்றவாறு பக்கத்து வீட்டிலிருக்கும் தோழியிடம் ஏதோ பேசிக்கொண்டிருப்பதற்கு மத்தியில் அம்மிணிக்குட்டி கேட்டாள்:
"லீலா... ஆண்கள் வெறித்துப் பார்த்தால், நமக்கு கர்ப்பம் உண்டாகுமா?''
லீலா உரத்த குரலில் குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். தனக்கு ஆறு மாதங்களாக மாத முறை தவறியிருப்பதாக அம்மிணிக்குட்டி கூறினாள்.
"உனக்கு கொஞ்சம் கூட ரத்தம் இல்ல. வெளிறிப்போய் இருக்கே...லோஹாஸவோம், த்ரக்ஷா அரிஷ்டம்... இந்த இரண்டையும் கலந்து சாப்பிட்டால்... போதும். ஒரு புட்டி சாப்பிட்டாலே, நல்ல ரத்த ஓட்டம் உண்டாயிடும்.'' லீலா கூறினாள்.
விஷு ஸம்க்ராந்தி சாயங்காலம் தாண்டி, தான் மேற்குத் திசையிலிருக்கும் நிலத்திற்கு ஒரு பாத்திரத்தில் நீருடன் சென்றபோது, ஆகாயத்திலிருந்து ஒரு நீல வெளிச்சம் ஓசை எழுப்பியவாறு தன் சரீரத்திற்குள் நுழைந்ததாக அம்மிணிக்குட்டி தோழியிடம் கூறினாள்.
"பிறகு.... எனக்கு நினைவு இல்லாமல் போனது.நினைவு வந்தப்போ, அடர்த்தியான இருட்டில் நான் துணியே இல்லாமல் அந்த நிலத்துல மல்லார்ந்து படுத்திருந்தேன்.
ஏதாவது பாம்பு கடிக்காமலிருந்தது என் அதிர்ஷ்டம். உடம்பு முழுவதும் ஒரு தளர்ச்சி... காலுக்கு நடுவுல ஒரு எரிச்சலும்... நான் முழுசா பயந்துட்டேன்.''- அவள் கூறினாள்.
லீலா அது எதையும் நம்பவில்லை.
இறுதியில் அம்மிணிக்குட்டி கர்ப்பமாக இருக்கி றாள் என்று பெண் மருத்துவரான காமாக்ஷியம்மா கூறியபோது,லீலா அந்த வெளிச்சத்தின் கதையை மீண்டும் நினைத்துப் பார்த்தாள்.
ஆகாயத்திலிருந்து வந்து விழும் வெளிச்சத்திற்கு ஒரு பெண்ணைக் கர்ப்பிணியாக ஆக்க முடியுமா? லீலா அறிவியலைக் கற்றுத்தரும் ஆசிரியரும் தன் சகோதரனுமான குமாரனுண்ணியிடம் அம்மிணிக் குட்டியின் கதையைக் கூறினாள். குளத்தில் குளிப்பதற் காக வரும் பலரிடமும் லீலா வெளிச்சத்தின் கதையைக் கூறினாள்.அவர்கள் சிரித்தார்கள்.
"கொஞ்ச நாட்களாகவே நான் பார்த்துக் கொண்டுதான் வர்றேன்... அம்மிணிக்குட்டியின் சிணுங்கலையும் குழையலையும்...
சமீபத்துல ஒரு நாள் அந்த வயலின் வரப்புல நின்றுகொண்டு அந்த முஸ்லீம் பையன்கூட பேசிக்கிட்டு இருந்தாள்... அந்த செய்யது மாஸ்டரின் மூத்த மகன்...வெளுத்த சுருண்ட முடியையும் மீசையையும் வைத்துக்கொண்டிருக்கும் அந்த முழு அழகன். அப்போதே நான் நினைச்சேன்... பிரச்சினை ஆகும் என்று. ஒரு வகையில் ஆதரவு இல்லாத பெண்... அறிவுரை சொல்றதுக்கு தாய் இல்ல. அப்பன் இல்ல. மொத்தத்துல இருக்குறது- கண் பார்வை இல்லாத ஒரு வயதான கிழவி. பிறகு... வேல்வார். அந்த ஆள் இருந்து என்ன பயன்? சாராயத்தைக் குடிச்சிட்டு வாசல்லயே வாந்தியெடுத்திட்டு திண்ணையில் வந்து படுத்திருப்பான்.
அவ்வளவுதான்.''
குளத்தில் குளிப்பவர்களில் வயதில் மூத்தவளான தாக்ஷாயணியம்மா கூறினாள். கூறி முடித்துவிட்டு, அவள் நீரிலிருந்து வெளியே வந்து, செடிகள் நிறைந் திருக்கும் ஒற்றையடிப் பாதையில் கால் வைத்தாள்.
வெயிலில் மஞ்சள் நிற பூக்கள் ஒளிர்ந்து கொண்டிருப்பதை அந்த பெண் பார்த்தாள்.
"நாசமா போறவ..''- இன்னொரு பெண் கூறினாள்.
அதற்குப் பிறகு அம்மிணிக்குட்டியை வீட்டிற்கு வெளியே பார்க்க முடியவில்லை.
மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதற்கு யாரும் முயற்சிக்கவில்லை.
பணியிலிருந்து முப்பது வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற பிரசவம் பார்க்கும் பெண், அம்மிணிக்குட்டியின் வீட்டிலேயே வந்து தங்கிவிட்டாள்.
மீனாக்ஷியம்மா. அவளுக்கும் சந்தோஷம்.
அம்மிணிக்குட்டிக்கும் சந்தோஷம். பாட்டியும் பிரசவம் பார்க்கும் பெண்ணும் சேர்ந்து வாசலில் அமர்ந்து புகையிலையைச் சேர்த்துக்கொண்டு வெற்றிலை போட்டுக் கொண்டிருப்பதை எல்லா நாட்களிலும் பாதையில் நடந்து செல்பவர்கள் பார்த்தார்கள்.
பிரசவம் பார்க்கும் பெண்ணின் கரடுமுரடான குரல் பக்கத்து வீடுகள் வரை எப்போதும் கேட்டுக் கொண்டிருந்தது.
சாராயம் அருந்தும் வயதான மனிதனின் சுய கவுரவத்திற்கு பங்கம் உண்டானது. அவன் அமைதியை வரவழைத்துக் கொண்டு ஒரு பெஞ்சில் போர்த்திக் கொண்டு அமர்ந்திருந்தான்.
எதுவுமே பேசவில்லை.
இடையே ஒரு இருமல் மட்டும் அவனிடமிருந்து வெளிப்பட்டது.
அந்தச் சூழலில்தான் அம்மிணிக்குட்டியின் பிரசவம் நடந்தது. அமாவாசை இரவு... காகத்தின் சிறகின் நிறத்திலிருந்த வேளையில் குழந்தை அழுததை யாரும் கேட்கவேயில்லை.
பிரசவம் பார்க்கும் பெண் முதலில் சற்று பதைபதைத்து விட்டாள்.தலைக்குப் பதிலாக நீண்ட கழுத்தைக்கொண்ட காளானைப் போன்ற ஒரு பொருள் தெரிந்தது. அவள் கைகளில் நல்லெண்ணெய்யை தேய்த்தாள். எதற்கும் தயாராகிக் கொண்டு அவள் தன் வேட்டியை மடித்துக் கட்டியவாறு கர்ப்பிணியின் கால் பகுதியில் குனிந்து நின்றாள். குழந்தை இறந்து பிறந்ததாக மறுநாள் பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள், பிரசவம் பார்க்கும் பெண் கூறி,தெரிந்து கொண்டார்கள்.
இறந்த உடலை இரவு முடிவதற்கு முன்பே குழி தோண்டிப் புதைத்து விட்டதாக பிரசவம் பார்க்கும் பெண் கூறினாள்.
"மகர மாதத்து வெப்பமாச்சே! எடுத்து வச்சிருந்தா... நாற ஆரம்பிச்சிடும்.''- கிழவி முணுமுணுத்தாள்.
அம்மிணிக்குட்டியின் குழந்தையின் பிணத்தைப் பார்க்க முடியாமல் போனதற்காக பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுக்கு கடுமையான ஏமாற்றம் உண்டானது.
குழந்தையின் நிறத்தைப் பார்த்தால்... அதன் முகத்தைப் பார்த்தால்...
அவர்களால் தெரிந்து கொண்டிருக்க முடியும்...
அம்மிணிக்குட்டியை ஏமாற்றியது யார் என்று. செய்யது அலியின் மகனின் முகச் சாயல் இருந்ததா என்பதை அறிந்துகொள்வதற்காக தாக்ஷாயணியம்மா பிரசவ அறைக்குள் அழுத்தி முனகியவாறு வந்தாள்.
பிரசவம் பார்க்கும் பெண் தரையில் போடப்பட்டிருந்த பாயில் அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டி ருந்தாள்.
அம்மிணிக்குட்டி உயிர்ப்பற்ற பார்வைகளுடன் மல்லாந்து படுத்திருந்தாள்...
நிம்மதியுடன்... தனக்கு எதுவுமே நடக்கவில்லை என்ற எண்ணத்துடன்..
"ஆண் குழந்தையா? பெண் குழந்தையா?''- தாக்ஷாயணியம்மா கேட்டாள்.
"ஆண் குழந்தை''- பிரசவம் பார்க்கும் பெண் கூறினாள்.
"அம்மிணிக்குட்டியின் நிறமா? இல்லாவிட்டால்... வெள்ளையாகவா?''- தாக்ஷாயணியம்மா கேட்டாள்.
"செத்துப்போன குழந்தையின் நிறத்தைத்தெரிஞ்சு, உங்களுக்கு என்ன கிடைக்கப் போகுது?''- பிரசவம் பார்க்கும் பெண் வெறுப்புடன் கேட்டாள்.
மறுநாள் அறிவியல் பாடத்தைக் கற்றுத் தரும் சுகுமாரன் நாயர் ரகசியமாக பிரசவம் பார்க்கும் பெண்ணான மீனாக்ஷியம்மாவை பள்ளிக்கூடத்தின் பின்பகுதிக்கு அழைத்தார்.
சாயங்கால வேளையாக இருந்ததால், அங்கு யாருமே இல்லை. அவளுக்கு முதல் தரமான வாசனைப் புகையிலையை அவர் தந்தார்.
"அம்மிணிக்குட்டியின் குழந்தை இறந்துதான் பிறந் ததா?''- அவர் கேட்டார்.
"இல்ல... மாஸ்டர். இதை யாரிடமும் நான் சொல்லல.
சொல்லவும் மாட்டேன்.நினைச்சுப் பார்க்குறப்போ, என் உடல் முழுவதும் குளிர்ந்து போகுது.
அம்மிணிக்குட்டி பெற்றது வெறும் ஒரு மனிதக் குழந்தை இல்ல. அது..சாத்தான். பெரிய ஒரு தலை... இரண்டு உருண்டையான கண்கள்., கண்ணாடி இருக்குற டார்ச் பார்த்திருக்கீங்கள்ல? அதை மாதிரிதான் ஒவ்வொரு கண்ணும் இருந்தது. ஒவ்வொரு விரல் அளவுக்குத்தான் இருந்துச்சு... கையும் காலும். ஆனால், தலையில இரண்டு நீண்ட கொம்புகள்...
இரண்டு காளான்கள் வளர்ந்து நிற்பதைப் போல... பெற்று விழுந்தவுடன், அது நடக்க ஆரம்பிச்சிடுச்சு. "பீப்... பீப்... பீப்' என்றொரு சத்தத்தை எழுப்பிக் கொண்டே அந்த நடை...
அம்மிணிக்குட்டி கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தாள். சுயநினைவு இல்லாத கிடப்பு... நான் அப்போ சாத்தானைப் பிடித்து சுடுநீர் இருந்த வாளியில் முக்கினேன்.
கொஞ்சம் நெளிஞ்சது. நானும் விடுறதா இல்ல. உயிர்போறது வரை நான் அதை இறுக்கமா பிடிச்சிக்கிட்டேன். என் விரல் முழுவதும் வலிச்சது.
"பரவாயில்ல... அந்த நாசமா போனது செத்துருச்சுல்ல....''
"அப்பவே நான் அதை கோணியில கட்டி புதைச்சிட்டேன். இதையெல்லாம் சொல்லிக்கிட்டு திரிய என்னால முடியல''- பிரசவம் பார்க்கும் பெண் கூறினாள்.
சுகுமாரன் மாஸ்டர் தன் முகத்தில் நிழலாடிய ஏமாற்றத்தை மறைப்பதற்காக இருக்க வேண்டும்- முகத்தைத் திருப்பி வைத்தவாறு நடந்தார்.